திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்.


திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் எல்லைக்குட்பட்ட அடைமிதிப்பான்குளம் கிராமம் அருகே இயங்கி வந்த கல்குவாரியில் 14.05.2022  அன்று இரவு பாறை சரிந்து விழுந்த விபத்தில் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த 6 பேர் சிக்கியுள்ளதாக கிடைத்த தகவலின்படி,  மழை பெய்த நிலையிலும் இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாத நிலையிலும், தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுந்த நிலையிலும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் உணர்வுமிகுதியால் உள்ளே சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கயிறு மூலம் இரவிலேயே உள்ளே காயமடைந்த நபர்களுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் உள்ளே இறங்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. அதேசமயம் மீட்புப் படையினருக்கு ஆலோசனை வழங்க முன்னாள் பேரிடர் மீட்பு  முதன்மை பயிற்சியாளர் திரு.மரிய மைக்கில் அவர்கள், தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டார்.

தொடர்ந்து தென் மண்டலகாவல் துறை ஐஜி அவர்கள்  அறிவுறுத்தலின்படி, கப்பற்படை கேப்டன் உடன் தொடர்பு கொண்டதால் கப்பற்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து சேர்ந்தது. ஆனால் ஹெலிகாப்டர்  மூலம் மீட்பு பணியாற்ற  போதிய சாத்தியக்கூறுகள் இல்லாததால் ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் ரமேஷ் என்பவர் மூலமாக காற்றாலையில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதுவும் தோல்வியடைந்தது. 



திருநெல்வேலி SP.P.சரவணன்IPS அவர்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி சரக DIG பிரவேஷ்குமார் IPS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு IAS ஆகியோர் அங்கேயே முகாமிட்டு, மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினர் துரிதமாக  செயல்பட்டு விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் மற்றும் நாட்டார் குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரை பத்திரமாக மீட்ட நிலையில், மூன்றாவது நபரான செல்வம் ஹிட்டாச்சி வாகனத்திற்குள் சிக்கி கை மற்றும் தலை மட்டும் வெளியில் தெரியும் நிலையில்  காணப்பட்டவரை  மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அச்சமயம் மீண்டும் பெரிய அளவிலான பாறை சரிந்து விழுந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானதால் மீட்பு படையினர் அனைவரும் பத்திரமாக மேலே வந்தனர். பின்னர் சுரங்கத் துறை வல்லுனர்கள் மூலம் மேலே உள்ள பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர், குவாரியில் வேலை செய்த தொழிலாளர்கள் உதவியுடன்  செல்வம் என்பவரை உயிருடன் மீட்டு மருத்துவமனை சென்று பார்த்த போது இறந்து விட்டார்.


16.05.2022 அன்று  தொடர்ந்து பாறைகள் விழுந்த வண்ணம் இருந்ததால் மக்களை பாதுகாக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள், பதாகைகள் அமைத்தும் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. கனிமவளத் துறையின் சிறப்பு வல்லுநர்கள் குழு, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுத்து வந்தனர். திருநெல்வேலி ஏ.டி.எஸ்.பி  தலைமையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


மேலும் தென்மண்டல ஐ.ஜி அவர்கள் குவாரியை நேரில் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியும் வருவாய் துறை முதன்மை செயலாளர்  குவாரியை பார்வையிட்டும் மீட்பு பணியினை துரிதப்படுத்தினர். இந்நிலையில் பாறைக்குள் சிக்கிய நபர்களில் அரியகுளத்தை  சேர்ந்த முருகன் என்பவரின் உடலை பேரிடர் மீட்பு குழு பெரும் முயற்சிக்கு பின்  மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்நிலையில் 17.05.2022-ம் தேதி அன்று தொடர்ந்து 3வது நாளாக காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீதமுள்ள உடல்களை  மீட்க முயற்சி மேற்கொண்ட நிலையில் ஐந்தாவது நபரின் உடலை சுமார் பத்து அடிக்கு கீழே பெரிய கற்களுக்கு  அடியில் கண்டுபிடித்து அதனை மீட்க பெரிய இரும்பிலான கயிறு மூலம் கட்டி இழுத்த போது   இரவு  12 மணி அளவில் அருகில் உள்ள பாறைகள் சாய்ந்து விழும் சாத்தியக்கூறு ஏற்பட்டதால் பணி நிறுத்தப்பட்டது. 

18.05.2022 -ம் தேதியன்று தொடர்ந்து நான்காவது நாளாக ஆரம்பிக்கப்பட்ட மீட்புப் பணியின் போது உடலானது பெரிய பாறைகளுக்கு இடையே கிடப்பதால் அதனை முறைப்படி துளையிட்டு வெடி வைத்து தகர்த்து பின்னர் நாள் முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டு மாலையில் மீட்டனர். வெடி வைத்து தகர்க்கும் போது மீட்பு படையினர் சிலர் பாதுகாப்பிற்காக மேலே சென்ற நிலையிலும் சிலர் குவாரிக்குள்ளேயே  ஒரு பாதுகாப்பான இடத்தை கண்டுபிடித்து அங்கேயே இருந்து மீட்பு பணியில் சிறிதும் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டனர். இதற்கிடையே ஆறாவது நபரின் உடலைக் கண்டு பிடிக்க சிரமம் ஏற்பட்டதால் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியிலிருந்து  மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது

19.05.2022-ம் தேதி தொடர்ந்து  ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணியின் போது ஆறாவது நபரின் உடலை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் குவாரியில் பணிபுரிந்த சக  ஊழியர்கள்  கூறியதன்  அடிப்படையில்  பார்த்த போது அவ்விடத்தினை  சுற்றியும்  சுமார்  4 அடி உயரத்தில் ஏழு கற்கள் இருந்தன. இதனை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வல்லுநர் குழு, மீட்புபணி குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கற்களை  வெடி‌ வைத்து தகர்க்க டிரில்லிங் மிஷின் கொண்டு அன்று முழுவதும் பாறைகளில் டிரில் செய்யப்பட்டது. மேலும் அடுத்த நாள் வெடிபொருட்கள் வைத்து பாறைகள் அகற்றப்பட்டது. 

20.05.2022ம் தேதி தொடர்ந்து 6 வது நாளாக மீட்பு பணி தொடங்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் ராஜேந்திரனை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். முதற் கட்டமாக பாறைகளை வெடிக்க செய்தனர். முன்னதாக போலீசார் குவாரியை சுற்றி இருந்தவர்களை ½ கிலோ மீட்டர் தொலைவில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதில் பாறை பல துண்டுகளாக வெடித்து சிதறியது. பின் பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டு  ராஜேந்திரனை  மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளரான செல்வராஜ் மற்றும் அவரது மகன் முருகனை  முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு. தில்லைநாகராஜன், உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார் தலைமையிலான போலீசார்  தொடர் 36 மணி நேரம் தேடுதலில் 1600 கி.மீ பயணம் செய்து மங்களூரில் தனியார் விடுதியில்  தங்கியிருந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

 21.05.2022-ம் தேதியும் துளையிடப்பட்ட பாறைகளை வெடிக்க செய்து கற்களை அகற்றிய பின்னரும் உடலை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. இருப்பினும் இரவிலும் தொடர்ந்து மீட்புப் பணியினை மாவட்ட எஸ்.பி அவர்கள் 21.05.2022 அன்று இரவு முகாமிட்டு கண்காணித்தார்.

22.05.2022-ம் தேதி தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி தொடங்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் ராஜேந்திரனை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். பாறைகளை இருமுறை வெடி வைத்து வெடிக்கச் செய்தனர். அப்போது ராஜேந்திரன் லாரியின் கேபினுக்குள் இருந்தது தெரியவந்தது. பின் லாரியின் கேபினை அறுத்து ராஜேந்திரனின் உடல் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று  வந்த மீட்புப் பணியில்  203 போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 32 பேரும் மற்றும்  தீயணைப்பு துறையினர் 55 பேரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு 2 நபர்களை உயிருடன் மீட்டும்  இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரின் உடலை மிகுந்த சிரமத்திற்கிடையே மீட்டும், மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம்  மீட்புபணியினை தொய்வில்லாமல் செய்து சிறப்பாக பணியினை மேற்கொண்டு முடித்தனர்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன.




Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.